×

ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஊட்டி : லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு மற்றும் கேர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட முன்னாள் தலைவர் கே.ஜே.ராஜு கலந்து கொண்டு பேசியதாவது: ரைபிள் ரேஞ்ச் என்பது கோத்தகிரி நகரின் முக்கியமான நீர் ஆதாரம் ஆகும். சுமார் 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த நீர் ஆதாரத்தின் ஒரு பகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

அந்த தனியார் நிறுவனம் அதனை சரியான முறையில் பயன்படுத்தாமல் மற்றொரு தனியாருக்கு உள் குத்தகைக்கு கொடுத்திருந்தது. இதனை திரும்ப பெற கோத்தகிரி பஞ்சாயத்து 30 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி திரும்ப பெற்றது. அந்த சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி அரசு ஆவணங்களில் மைதானம் என்று பதியப்பட்டுள்ளது. இதனை சதுப்பு நிலம் என மாற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.

மேலும், சதுப்பு நிலத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாக்க வேண்டும். அங்குள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை நீரை முறைப்படுத்த வேண்டும்.அந்த பகுதியிலுள்ள யாரும் உரிமை கொண்டாடாத கட்டிடத்தை அழியும் தருவாயில் உள்ள தாவர இனங்களை உருவாக்கும் நர்சரி மையமாக மாற்ற வேண்டும். ரைபில் ரேஞ்சில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு கிணறுகள் யாருக்கும் பயனில்லாமல் கிடப்பது வருத்தத்திற்குரியது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே இந்த சதுப்பு நிலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கேர் அறக்கட்டளையின் கோத்தகிரி வட்டார கள அலுவலர் வினோபாப் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பற்றி விரிவாக பேசினார்.

கார்டன் ஹோப் டிரஸ்ட் அமைப்பின் நிர்வாக அலுவலர் அருண் பெல்லி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெண்களின் பங்கு குறித்து விரிவாக பேசினார். கேர் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரிதிவ்ராஜ், நீலகிரி மாவட்டத்தின் உடைய நீர் ஆதாரங்களை குறித்தும் சமவெளி பகுதிக்கு நீலகிரியின் கொடை குறித்தும் பேசினார்.

The post ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Wetland ,Conservation ,Awareness ,Camp ,Longwood Oasis Conservation Committee ,CARE Foundation ,KJ Raju ,president ,Nilgiri ,Tamil Nadu Science Movement ,Kotagiri ,Wetland Conservation Awareness Camp ,Dinakaran ,
× RELATED இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு